வணக்கம் உங்களை அங்கதம் ஆரா வலைத்தளதிற்கு அன்புடன் வரவேற்கிறேன். இந்தப் பதிவில் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் (Mrigashirsha / Mirugasiridam) பிறந்த உங்களுக்கான குணாதிசயங்கள், எதிர்கால வாழ்க்கை பலன்கள், அதிர்ஷ்ட யோக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பார்க்க போகிறோம்.
நட்சத்திரத்தின் அமைப்பும் புராணக் கதையும்
பால்வெளி அண்டப் பாதையில், மான் தலைப் போன்ற வடிவத்தில் அமைந்த நட்சத்திரக் கூட்டம்தான் இந்த மிருகசீரிஷம். "மிருகம்" என்றால் மான், "சீரிடம்(சீரம்)" என்றால் தலை என்று பொருள். அதனாலேயே இதை மான்தலை நட்சத்திரம் என்றும் சொல்வார்கள். இது மிகவும் அழகான வடிவமைப்பைக் கொண்ட நட்சத்திரம்.
இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சந்திரன் (Moon). அதிபதி (கிரக அதிபதி) செவ்வாய் பகவான் (Mars). இதன் விருட்சம் (புனித மரம்) கருங்காலி மரம் (Ebony tree). மிருகசீரிஷத்தின் 1ஆம் பாதமும் 2ஆம் பாதமும் ரிஷப ராசியிலும் (Taurus), 3ஆம் பாதமும் 4ஆம் பாதமும் மிதுன ராசியிலும் (Gemini) வருகின்றன.
நம் புராணங்களில் ஒரு அழகான கதை சொல்லப்படுகிறது. சந்திர பகவான் மான் வடிவத்தில் வந்து காட்டில் கடுமையான தவம் செய்தாராம். அந்தத் தவத்தின் அடையாளமாகத்தான் இந்த நட்சத்திரம் மான் தலை போன்ற வடிவத்தைப் பெற்றதாகக் புராணங்களில் கூறுகிறார்கள். இந்த நட்சத்திரம் முக்கியமாக தேடல் மற்றும் ஆராய்ச்சியைக் (searching & exploring) குறிக்கும். மான் எப்படித் தண்ணீருக்காகவும், பச்சைப் புற்களுக்காகவும் அலைந்து தேடுமோ, அதைப் போலத்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவு, உண்மை, மற்றும் புதுமை இவற்றுக்காக எப்போதும் தேடிக்கொண்டே இருப்பார்கள்.
மிருகசீரிஷ நட்சத்திர குணாதிசயங்கள் (இயல்பு)
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எப்போதும் மான் போன்று சுறுசுறுப்பாகவும், விழிப்புடனும் செயல்படுவீர்கள். உங்களை ஒரு இடத்தில் நிற்க வைக்க முடியாது. எதையும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் குணம் உங்களிடம் இயல்பாகவே இருக்கும். ஒரு விஷயத்தை மேலோட்டமாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்; "ஏன்?", ஏதுக்கு? "எப்படி?" என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பீர்கள்.
செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால், உங்களுக்கு தைரியமும் வீரமும் அதிகமாக இருக்கும். எந்தக் கடினமான சூழ்நிலையையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களிடம் எப்போலுதும் உண்டு. “பயமா எனக்கா?” என்பது போல பயமென்றால் உங்களுக்குத் என்ன என்றே தெரியாது. ஆனால், இதற்கு ஒரு எதிர்மறைப் பக்கமும் உண்டு முன்கோபம் கொஞ்சம் அதிகமாகவே வரும். எதையும் முகத்தில் அடிப்பது போல சொல்லும் குணம் உங்களுக்கு இருப்பதால், சில நேரங்களில் மற்றவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். "அதிகமாகப் பேசிட்டோமோ" என்று யோசிக்கவும் மாட்டிங்க.
உங்களிடம் சிறந்த பேச்சு திறமை இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் லாஜிக்காக (Logic) விவாதிக்கும் திறன் பெற்றிருப்பீர்கள், உங்களிடம் வாதம் செய்ய சிலர் தயங்குவார்கள். யாரும் உங்களை வாதத்தில் எளிதில் வெல்ல முடியாது. அதே நேரம், மற்றவர்களின் மனதை எளிதில் புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக் கொள்ளும் திறனும் உங்களுக்கு உண்டு. நீங்கள் ஒரு நல்ல கேட்பாளராகவும் இருப்பீர்கள்.
கலைகள், இலக்கியம், மற்றும் புதிய விஷயங்களைக் கற்பதில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். புதிதாக ஒன்றைக் கத்துக்கத்தான் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும், அரைச்ச மாவ அரைக்க புடிக்காது. அதுவும் அறிவியல், தொழில்நுட்பம், பயணம், மொழிகள் கற்பது போன்றவற்றில் உங்களுக்குத் அதிக ஆர்வம் உண்டு.
எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு (pre-planning) செயல்படுத்துவதில் வல்லவர்கள் நீங்கள். "ஒழுங்கீனம்" என்ற வார்த்தையே உங்களுக்குப் பிடிக்காது. உங்கள் வேலை இடம், வீடு, நேரம் எல்லாமே ஒழுங்காக இருக்கும், மற்றவர்களும் அது போல இருக்க விரும்புவிர்கள்.
வாழ்க்கை மற்றும் திசா பலன்கள் (Dasha Periods)
இப்போது உங்கள் வாழ்க்கையில் எந்தெந்த காலகட்டத்தில் எந்தெந்த திசைகள் நடக்கும் என்பதைப் பார்க்கலாம். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் பலன்கள் உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் நிலையைப் பொறுத்து மாறுபடும்.
செவ்வாய் திசை (குழந்தைப் பருவம்): நீங்கள் பிறக்கும் போதே செவ்வாய் திசையில் பிறந்திருப்பீர்கள். இது உங்கள் குழந்தைப் பருவத்தில் (தோராயமாக 0 முதல் 7 வயது வரை) நடக்கும். செவ்வாய் பகவான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், உங்கள் குழந்தைப் பருவம் மிகவும் சுறுசுறுப்பாகவும், எந்தப் பெரிய நோயுமின்றி ஆரோக்கியமாகவும் கழியும். சின்ன வயதிலேயே உங்களுக்குத் துணிச்சல் அதிகமாக இருக்கும். விளையாட்டுகளில் மற்ற குழந்தைகளை விட முன்னிலையில் இருப்பீர்கள்.
இராகு திசை (பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம்): இராகு திசை 18 வருட காலம் (தோராயமாக 7 முதல் 25 வயது வரை) நடைபெறும். இது உங்களுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம். இராகு பகவான் உங்கள் ஜாதகத்தில் 2, 4, 10, மற்றும் 11 ஆம் இடங்களோடு நல்ல தொடர்பு கொண்டிருந்தால், கல்வியில் மிகவும் சிறந்து விளங்குவீர்கள். குறிப்பாக விளையாட்டு, தொழில்நுட்பம் (Technology), பொறியியல், அல்லது வெளிநாட்டுத் தொடர்புடைய வேலைவாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் அமைய வாய்ப்பு உண்டு. சிலருக்கு இந்தக் காலத்திலேயே வெளிநாடு வெளி ஊர் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.
குரு திசை (திருமணம், தொழில், சொத்து): குரு திசை 16 வருட காலம் (தோராயமாக 25 முதல் 41 வயது வரை) நடைபெறும். இது உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமாகும். இந்தக் காலத்தில்தான் காதல், திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஆகியவை நடைபெறும். குரு (வியாழன்) பார்த்தல் கோடி நன்மை அப்படின்னு சொல்லுவாங்க நல்ல நிலையில் இருந்தால், சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தும், கௌரவமும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்க எந்தத் துறையில் இருந்தாலும், அந்தத் துறையில் உங்களுக்கு ஒரு நல்ல பெயர் வரும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் செல்வச் செழிப்போடு வாழ்வீர்கள். இந்தக் காலகட்டத்தில்தான் நீங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
சனி திசை : அடுத்து சனி திசை 19 வருட காலம் (தோராயமாக 41 முதல் 60 வயது வரை) நடக்கும். சனி பகவானின் காலம் உழைப்பின் காலம். இந்தக் காலகட்டத்தில் உங்கள் உழைப்பு சற்று அதிகமாக இருக்கும். பதவியில் உயர்வும், அதிக பொறுப்புகளும் வரும். ஆனாலும், சனி உங்கள் ஜாதகத்தில் பலமாக இருந்தால், செய்யும் தொழிலில் நிலையான வளர்ச்சியும், அசையா சொத்துக்கள் (நிலம், வீடு, தங்கம்) சேரும் யோகமும் கிடைக்கும். இந்த வயதில் உங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பீர்கள்.
புதன் திசை: உங்களுடைய ஓய்வுக் காலத்தில் (60 வயதிற்குப் பிறகு) புதன் திசை நடைபெறும். புதன் பகவான் உங்கள் ஜாதகத்தில் நல்ல அமைப்பில் இருந்தால், முதுமைக் காலத்தில் எந்த ஒரு மனக்குறையும் இல்லாமல், மிகுந்த அறிவாற்றலோடும், பிள்ளைகள், பேரன் பேத்திகளுடனும் சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிப்பீர்கள். உங்களுக்குப் படிக்கும் பழக்கம், தொலை தூர பயணம் செய்யும் ஆர்வம் எல்லாம் இருந்துகொண்டே இருக்கும். உங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.
பரிகாரங்கள்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்குச் சில பரிகாரங்களைக் கடைப்பிடிப்பது நல்லது.
- செவ்வாய் பகவானை வழிபடுவது மிக முக்கியம். செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் கிரகத்துக்குரிய மந்திரங்களை ஜெபிக்கவும். நீங்கள் கருங்காலி மரத்தை (இந்த நட்சத்திரத்தின் மரம்) வழிபடலாம். முடிந்தால், உங்கள் வீட்டில் கருங்காலி மரம் நட்டு வளர்க்கவும்.
- உங்கள் முன்கோபத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். கோபம் வரும்போது, 10 முறை ஆழமாக மூச்சை இழுத்து விடவும். வெளிப்படையாகப் பேசுவது நல்லதுதான், ஆனால் அது எல்லா நேரத்திலும் சரியாக வராது சில நேரங்களில் சற்று மென்மையாகப் பேசினால் உறவுகள் சிறப்பாக இருக்கும்.
- செவ்வாய்க்குரிய வண்ணம் சிவப்பு. செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு நிற ஆடை அணியலாம். மேலும், செவ்வாய் கிரகத்துக்குரிய தானியமான பருப்பு, மசூர் தானியங்களைத் தானம் செய்யலாம்.
முக்கிய குறிப்பு: எப்போதும் உங்கள் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காட்டி, உங்கள் கிரகங்களின் நிலையைத் தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் இந்தப் பொதுவான பலன்கள் உங்களுக்குச் சரியாகப் பொருந்துமா என்று புரியும்.

Post a Comment