வணக்கம் உங்களை அங்கதம் ஆரா வலைத்தளதிற்கு அன்புடன் வரவேற்கிறேன்! இந்தப் பதிவில் பூராடம் நட்சத்திரத்தில் (Pooradam / Purva Ashadha) பிறந்த உங்களுக்கான குணாதிசயங்கள், எதிர்கால வாழ்க்கை, அதிர்ஷ்ட யோக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பார்க்கப் போகிறோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
பூராடம் நட்சத்திரத்தின் அமைப்பும் புராணப் பெருமையும்
பால்வெளிப் பாதையில் நான்கு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து ஒரு அழகிய சன்னல் சட்டம் அல்லது யானைத் தந்தம் போன்ற வடிவத்தை உருவாக்கும் அதுதான் பூராடம். பூராடம் நட்சத்திரத்தின் நட்சத்திரத்தின் அதிதேவதை வருணன் (Varuna), மழை, கடல் மற்றும் நீதிக்குக் கடவுள். பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் (Venus) இவர் அழகு, செல்வம், சுகபோகங்களின் அதிபதி. பூராடம் நட்சத்திரத்தின் விருட்சம் வன்னி மரம். இந்த நட்சத்திரம் தனுசு ராசியில் (Sagittarius) அமைந்துள்ளது நான்கு பாதங்களும் இங்கேதான் உள்ளது.
'பூர்வாஷாடம்' என்ற வேதப் பெயருக்கு 'தொடக்க வெற்றி' அல்லது 'வெல்ல முடியாதது' என்று பொருள். இதன் அடையாளம் விசிறி (fan) அல்லது முறம். பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான யாக்கோபு முனிவருக்கு உகந்த நட்சத்திரமும் இதுவே.
வேதங்கள் சொல்கின்றன 'அப' என்றால் விண்வெளி நீர். வான்வெளி எங்கும் பரவி மனித குலத்தை வளர்க்கும் சக்தி அது. வருண பகவான் நீருக்கும், கடலுக்கும், மலைகளுக்கும் காவல் கடவுள். வள்ளுவப் பெருமானே "நீரின்றி அமையாது உலகு" என்று சொல்லியிருக்கிறார். இந்த நட்சத்திரத்தில் ஒரு பெண் பிறந்தால், அவள் தீர்க்க சுமங்கலியாக (நெடுங்காலம் கணவனுடன் வாழ்பவளாக) இருப்பாள். நவராத்திரியில் தேவி பூஜைக்கு உகந்த நட்சத்திரம் இது அம்பாளே என்றென்றும் தீர்க்க சுமங்கலி. அதனால்தான் இங்கு பிறந்த பெண்களும் அந்த வரத்தைப் பெறுகிறார்கள்.
பூராடம் நட்சத்திரத்தின் குணாதிசயங்கள் – ஒரு தனி அழகு
பூராட நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அழகிய, எடுப்பான தோற்றமுடையவர்கள். அறிவுக் கூர்மை உள்ளவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக இருந்து சாதிப்பீர்கள். மிகுந்த சாமர்த்தியசாலி (skillful). ஒரு விஷயத்தைக் கேட்டாலோ, கற்றாலோ, பார்த்தாலோ, அதிலுள்ள நுணுக்கங்களை ஆழ்ந்து கிரகித்துக்கொள்வீர்கள். நன்றாக ஆராய்ந்துதான் முடிவெடுப்பீர்கள். அதிகமாகப் புத்தகங்கள் படிப்பீர்கள். சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். எந்த விடயத்திலும் உள்நோக்கத்துடன் (intention) செயல்படுவீர்கள். திட்டமிட்டு, முறையாக ஒரு செயலைச் செய்வீர்கள். மற்றவர்களிடம் திறமையாகப் பேசி உங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்கள் ஒவ்வொரு செயலும் உங்கள் லட்சியத்தையும் குறிக்கோளையும் சார்ந்ததுதான்.
நல்ல ஆடை ஆபரணங்கள் அணிவீர்கள், வாசனைப் பொருட்கள் பயன்படுத்துவீர்கள். பெரும் செல்வந்தர்கள், உயர்ந்த அந்தஸ்துள்ளவர்கள், உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் உங்களுக்கு நண்பர்களாக அமைவார்கள். உங்கள் தோற்றம் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்கு இருக்கும். அதிகமாகப் பயணம் செய்ய விரும்புவீர்கள். உண்மையைப் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். இயற்கையாகவே தர்ம சிந்தனை உங்களுக்கு உண்டு. அதிகமாகச் சுகபோகங்களை அனுபவிப்பீர்கள். நல்ல செல்வம், செல்வாக்கோடு வாழ்வீர்கள்.
உங்களுக்குக் குறுகிய எண்ணம், குறுகிய புத்தி எதுவும் கிடையாது விசாலமான மனமுடையவர்கள். அடுத்தவர்களின் திறமைகளை நன்றாக ஊக்குவிப்பீர்கள். உங்களை அண்டி வந்தவர்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொடுப்பீர்கள். இருப்பினும், உங்கள் ஒவ்வொரு செயலிலும் கொஞ்சம் சுயநலம் கலந்ததாகத்தான் இருக்கும். அவ்வளவு சீக்கிரம் மற்றவர்களின் கொள்கைக்கு உடன்பட மாட்டீர்கள். உங்கள் வசீகரமான தோற்றத்தாலேயே அதிகமான நண்பர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள். பிறவியிலேயே சிலர் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்திருப்பீர்கள். செல்வம் அதிகமாக இருந்தாலும், இன்னும் அதிகச் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். கஷ்டப்பட்டு உழைப்பது, கடின உழைப்பு இவையெல்லாம் உங்களுக்குப் பிடிக்காது. அதிகமாக அலட்டிக்கொள்ளாமல், உடலை வருத்திக்கொள்ளாமல் பணத்தை எப்படிச் சம்பாதிப்பது என்பதுதான் உங்கள் எண்ணம். ஆடம்பரத்தையும், டாம்பீகத்தையும் (pomp) விரும்புவீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தைச் சுத்தமாகவும், அலங்காரமாகவும் வைத்துக் கொள்வீர்கள்.
தெய்வ பக்தி அதிகமாக இருப்பதால், அதிகமாக ஆலயங்களுக்குச் செல்வீர்கள். கோவில் பூஜை புனஸ்காரங்களில் (rituals) அதிக ஆர்வம் உண்டு. எல்லாப் பண்டிகைகளையும், திருவிழாக்களையும் சந்தோஷமாகக் கொண்டாடுவீர்கள், தவறாமல் வழிபாடு செய்வீர்கள். அசையாச் சொத்துக்கள் (immovable properties) அதிகமாகச் சேரும். பக்ஷபாதமாக (partiality) நடந்துகொள்வது உங்களுக்குப் பிடிக்காது எல்லோரிடமும் சமமாகப் பழகுவீர்கள். உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்துவீர்கள். உங்கள் குடும்பத்தாரோடு அன்பும் பாசமும் கொண்டிருப்பீர்கள்; அவர்களுக்கு என்ன தேவையோ அதை முறையாகச் செய்து கொடுப்பீர்கள்.
நீங்கள் ஒரு கலைப்பிரியர், கலாரசிகர் (art lover). அழகை ஆராதிப்பீர்கள். இயற்கையாகவே கலைகள் மீது அதிக ஆர்வம் இருப்பதால், கலைத்துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பீர்கள். கலைத்துறை சார்ந்த தொழிலில் ஈடுபடுவீர்கள். பிரச்சனைகளைத் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள். சமூக சேவை செய்வதற்காகப் பல இடங்களுக்குப் பயணம் செய்வீர்கள். அமைதியும், அடக்கமும் கொண்டவராக இருப்பீர்கள். உங்களுக்கு 'பிரசன்ஸ் ஆஃப் மைண்ட்' (Presence of mind) ரொம்ப அதிகமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் உடனடியாக முடிவெடுப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகமாக இருந்தாலும், தோல்வியைக் கண்டு துவண்டு போய்விடுவீர்கள் – தோல்வியை உங்களால் தாங்க முடியாது. சில நேரங்களில் கோபத்தின் காரணமாக அவசரமான முடிவெடுத்து அவஸ்தைப்படுவீர்கள். கோபத்திலும் கூட நீங்கள் அழகாகத்தான் இருப்பீர்கள். இந்தக் குணங்களை மாற்றிக் கொண்டால் வாழ்க்கையில் இன்னும் அதிகமாக வெற்றி பெற முடியும்.
கவலையும் துக்கமும் வந்தாலும், அதிலிருந்து சீக்கிரமாக வெளியே வந்துவிடுவீர்கள் நீண்ட நாள் கவலையில் இருப்பது உங்களுக்குப் பிடிக்காது. எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பம். உங்கள் தூய்மை, நேர்மை, அறிவாற்றல் மற்றவர்களை உங்கள் பால் ஈர்க்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களை அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம்.
சில விஷயங்களில் பிடிவாத குணம் உங்களுக்கு இருக்கும். ஆனால் அந்தப் பிடிவாதமும் சில நேரங்களில் வெற்றியைத் தேடித் தரும். உங்களில் சிலர் பிறந்த ஊரை விட்டு வெளியூரில் சென்று பெரும் செல்வந்தராக ஆகிவிடுவீர்கள். நல்ல பணவசதி படைத்த செல்வந்தராக ஆவீர்கள் ஏனெனில் இந்த நட்சத்திரம் சுக்கிரனுடையது. எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையையும் லாவகமாக (with ease) உங்களுக்குச் சாதகமாகத் திருப்பும் திறன் உங்களுக்கு உண்டு. "பணம் பணத்தைச் சம்பாதிக்கும்" என்று சொல்வார்கள் அது இந்த நட்சத்திரக்காரர்களுக்கு நன்றாகப் பொருந்தும்.
உங்களில் சிலருக்குக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை ரொம்பப் பிடிக்கும். குடும்ப உறுப்பினர்களோடு ஒற்றுமையாக இருந்து ஒரு பெரிய குடும்பமாக வாழ விரும்புவீர்கள். உங்கள் கூடப் பிறந்தவர்களோடு ரொம்பப் பாசமாக இருப்பீர்கள். இந்தச் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும், அந்தஸ்தும் மிக்க ஒரு மனிதராக வலம் வருவீர்கள். பணத்தாலேயே காரியத்தைச் சாதிக்க நினைப்பீர்கள். நீங்கள் தோல்வியே அறியாதவர் அவ்வளவு சீக்கிரம் உங்களை யாரும் தோற்கடிக்க முடியாது. கர்வமும், சுதந்திர மனப்பான்மையும் உள்ளவராக இருப்பீர்கள். மற்றவர்கள் மீது உங்கள் அதிகாரத்தையும், செல்வாக்கையும் செலுத்துவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் லாஜிக்காக (logically) சிந்திப்பீர்கள். உங்களிடம் பயம் கிடையாது, வேகம் மட்டும்தான். முன்னேறித் துடிப்பவர் நீங்கள். தனக்குப் பிரபலம் வர வேண்டும், தன் பெயர் எங்கும் பரவ வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள்.
இருப்பினும், சிலருக்குக் கல்வியில் தடை ஏற்படலாம். தன் குற்றங்களை மறைக்கும் குணம் சிலருக்கு இருக்கும். கடல், ஆறு, நீர் சம்பந்தமான தொழில்கள் அல்லது பயணங்கள் சிலருக்கு அமையும்.
பூராடம் நட்சத்திரத்தின் வாழ்க்கையும் திசாபலன்களும்
சுக்கிர திசை: நீங்கள் பிறக்கும்போதே சுக்கிர திசையில் பிறந்திருப்பீர்கள். இது 20 வருட காலம். பள்ளிப் படிப்பு காலத்தில்தான் இந்தத் திசை நடக்கும். பூராட நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே இது முடிந்துவிடும். இந்தத் திசை உங்கள் தந்தைக்கு யோகத்தைத் தரும் அவருடைய தொழில் பல மடங்கு பெருகும். அவருக்கு வருமானம் அதிகமாகக் கிடைப்பதால் நீங்கள் சுகத்தை அனுபவிக்க முடியும்.
நீங்கள் நல்ல புத்திக்கூர்மை உள்ளவர் என்பதால் நன்றாகக் கல்வி படிப்பீர்கள். பள்ளிப் பருவத்திலேயே கலைத்துறையில் அதிக ஈடுபாடு இருப்பதால், கலை சம்பந்தமான போட்டிகளில் ஈடுபட்டு அதிகமாகப் பரிசுகளை அள்ளிக் குவிப்பீர்கள். பள்ளிப் படிப்புடன் நாட்டியம், இசை, பாட்டு, ஓவியம் போன்ற கலைகளையும் நன்றாகக் கற்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாகத் தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். சுகவாசியாக இருப்பீர்கள். பெற்றோர்களின் அரவணைப்பும் ஆதரவும் நன்றாக அமையும்.
உங்கள் ஜாதகத்தில் சுக்கிர பகவானின் பலத்துக்கு ஏற்ற மாதிரிதான் கல்வி அமையும். சுக்கிர பகவான் 8 மற்றும் 12ஆம் பாவங்களைத் தொடர்பு கொண்டிருந்தால், கல்வியில் தடை ஏற்படும் அல்லது மந்த நிலை ஏற்படும்.
சூரிய திசை: அடுத்து சூரிய திசை 6 வருட காலம் வரும் கல்லூரிப் படிப்பு காலம். சூரிய பகவான் ஜாதகத்தில் நல்ல பலம் பெற்றிருக்க வேண்டும். 9ஆம் பாவக் கொடுப்பினை நன்றாக அமைந்திருந்தால், கல்லூரிப் படிப்பு சிறப்பாக அமையும். நீங்கள் விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து நன்றாகப் படித்துப் பட்டம் பெறுவீர்கள். உங்கள் கூடப் படிப்பவர்களிலேயே தனியாகத் தெரிவீர்கள்.
20 வயது முதல் 60 வயது வரைதான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான காலம். இந்தக் காலத்தில்தான் வருமானம், குடும்பம், குழந்தைகள், அந்தஸ்து, புகழ், கௌரவம், சொத்து எல்லாம் அமையும். சம்பாதிக்கும் வயதில் உங்களுக்குச் சந்திர திசை (10 வருடம்), செவ்வாய் திசை (7 வருடம்), ராகு திசை (18 வருடம்), குரு திசை (16 வருடம்) வரிசையாக வரும். இந்த நான்கு கிரகங்களும் ஜாதகத்தில் நல்ல பலம் பொருந்தி அமைந்திருக்க வேண்டும்.
சந்திர திசை: சந்திர திசையில், சந்திரன் பலம் பொருந்தி இருந்தால், படித்து முடித்த உடனேயே வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் போய் அதிகமாகப் பணம் சம்பாதிப்பீர்கள், அங்கேயே செட்டில் ஆகிவிடுவீர்கள். சிலர் தொழிலில் ஈடுபட்டு, தொழிலை நன்றாகப் பெருக்குவார்கள். தொழில் நல்ல வளர்ச்சி அடையும், அதிகப் பண வரவு கிடைக்கும். இளமைக் காலத்திலேயே செல்வாக்கு அதிகமாக உயரும். உரிய காலத்தில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணை நீங்கள் விரும்பியபடி அமைவார். அவரால் உங்கள் அந்தஸ்தும் பொருளாதாரமும் மேன்மேலும் உயரும். குழந்தைச் செல்வங்கள் கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் பாசமும் பொங்கும். உங்களில் பெரும்பாலானோருக்குக் கலை சார்ந்த தொழில் அல்லது நீர் சார்ந்த தொழில் அமையும்.
செவ்வாய் திசை: செவ்வாய் திசையில், செவ்வாய் பலம் பொருந்தி இருந்தால், அசையாச் சொத்துக்கள் அதிகமாகக் கிடைக்கும். உடன் பிறந்தவர்களோடு நல்ல ஒற்றுமை இருக்கும்; அவர்களால் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைக்கும். எப்போதும் உயர்தர உணவே சாப்பிடுவீர்கள். வீட்டுக்கு வந்தவர்களைச் சாப்பிடாமல் அனுப்பமாட்டீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் வீடு, வாகனம் எல்லாம் மிகவும் அழகாக இருக்கும். அதிக வசதியும் சொகுசும் மிக்கவராக இருப்பீர்கள். தொழிலில் அதிகமாக முதலீடு செய்து, பல மடங்கு லாபம் காண்பீர்கள்.
இராகு திசை: இராகு திசையில், ராகு பலம் பொருந்தி இருந்தால், உங்கள் தொழில் வெளிநாடுகளில் பெருகும். பல கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகம் செய்வீர்கள். முக்கிய எச்சரிக்கை: இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் பெண்கள் விஷயத்தில் ரொம்பக் கவனமுடன் இருக்க வேண்டும். ராகு போககாரகன் என்பதால், வாழ்க்கையில் சகல சுகபோகங்களும் கிடைக்கும். நீங்கள் அனுபவிப்பதை மற்றவர்கள் பார்த்து ஏங்குவார்கள். சிலர் கலைத்துறையில் நல்ல பிரகாசம் அடைவீர்கள். சோசியல் மீடியாக்களில் (social media) நல்ல பிரபலம் அடைவீர்கள். அதிக உழைப்பு இல்லாமலேயே அதிகமான பண வரவு கிடைக்கும். முறையான உடற்பயிற்சி, யோகா, பிராணாயாமம் செய்வது அவசியம் இல்லையென்றால் நோயால் அவஸ்தைப்பட நேரிடும்.
குரு திசை: குரு திசையில், குரு பகவான் ஆரோக்கியம், பொருளாதாரம், குடும்ப அமைப்பு இவற்றுக்குச் சாதகமாக அமைந்திருக்க வேண்டும். அப்படி அமைவது ஒரு அதிர்ஷ்ட யோகம். குரு செல்வத்தில் திளைத்து, சகல சுகபோகங்களையும் தருவார். சிலருக்கு உடற்பருமன் (obesity) ஏற்பட்டுவிடும் உடலை முறையாகப் பராமரிக்க வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் (share market) அதிகமாக முதலீடு செய்து அதிக லாபம் காண்பீர்கள். அதிகமாகக் கோவில் திருப்பணிகள் செய்வீர்கள். தான தருமங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். உங்கள் வருவாயில் பெரும்பகுதியைத் தான தருமத்திற்குச் செலவழித்தாலும், செல்வ வளம் குறையாது.
சந்திரன், செவ்வாய், இராகு, குரு இந்த நான்கு கிரகங்களும் ஜாதகத்தில் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்தால் மேற்சொன்ன பலன்கள் எல்லாம் நன்றாகக் கிடைக்கும். இல்லையென்றால், பலன்களுக்கு எதிர்மாறானதாகவும், தடைகளுடனும் இருக்கும்.
சனி திசை: அடுத்து சனி திசை (19 வருடம்) மற்றும் புதன் திசை (17 வருடம்) வயோதிக காலத்தில் வரும். இந்தக் கிரகங்கள் 5, 7, 11ஆம் பாவங்களைத் தொடர்பு கொண்டிருந்தால், உங்கள் வயோதிக காலம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். எதையும் வெளிப்படையாகப் பேசி, எல்லோரையும் அன்பால் கவர்வீர்கள். அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக (role model) திகழ்வீர்கள். உங்கள் குடும்ப வம்சத்தில் நீங்கள் ஒரு சகாப்தமாகத் திகழ்வீர்கள். பிள்ளைகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள் இவர்களோடு சந்தோஷமாக வாழ்வீர்கள்.
பரிகாரங்கள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்குச் சில பரிகாரங்களைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. இவை உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி, நல்ல பலன்களை அதிகரிக்கும்.
முதலில், வருண பகவானை (நீர் கடவுள்) வணங்குவது மிக முக்கியம். தினமும் காலையில் எழுந்ததும் ஒரு செம்புத் தட்டில் நீரை எடுத்து, சூரியனுக்கு அர்ப்பணித்து, "ஓம் வருணாய நமஹ" என்று 108 முறை கூறி அந்த நீரைத் துளசி அல்லது வேப்ப மரத்தின் அடியில் ஊற்றவும். வெள்ளிக்கிழமைகளில் குளம், குட்டை, ஆறு போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று, தாமரைப் பூ, வெள்ளைப் பூக்கள், சந்தனம், அகர்பத்தி வைத்து வழிபடுவது வருண பகவானுக்கு மிகவும் பிடித்தமானது. உங்களால் முடிந்தால், தாகம் உள்ளவர்களுக்குத் தண்ணீர் வழங்குவது, கிணறு, குளம், தொட்டிகள் சுத்தம் செய்வதும் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
சுக்கிர பகவானை வழிபடுவது இந்த நட்சத்திரத்திற்கு மிக அவசியம். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடை அணிந்து, வெள்ளை நிறப் பூக்கள் (முல்லை, மல்லிகை, ரோஜா), சர்க்கரை, பொரிப்பருப்பு, வெண்சந்தனம், அரிசி, வெள்ளரிப்பழம் ஆகியவற்றைத் தானம் செய்யவும். சுக்கிர மந்திரமான "ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் ஸ: சுக்ராய நமஹ" என்பதைத் தினமும் 108 முறை ஜெபிக்கவும். சுக்கிரனுக்கு உகந்த நிறம் வெள்ளை, உகந்த உலோகம் வெள்ளி. ஆகவே வெள்ளிப் பொருட்களை அணிவது, வெள்ளி விளக்கேற்றுவது நல்லது.
வன்னி மரத்தை வணங்குவது இந்த நட்சத்திரத்திற்கு உகந்த பரிகாரமாகும். வன்னி மரத்தின் அடியில் அமர்ந்து, மரத்திற்குத் தண்ணீர் ஊற்றி, மரத்தைச் சுற்றி 7 முறை வலம்வாருங்கள். மரத்தின் அடியில் மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, தேங்காய், பழங்கள் வைத்து வழிபடுங்கள். வன்னி மரத்தின் சிறு துண்டு அல்லது இலையை வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்துப் பூஜிப்பது செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும்.
தான தருமங்கள் செய்வது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அதைத் தொடருங்கள். ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பது, ஆடை, குடை, விசிறி, குளிர்ந்த பானங்கள், பழங்கள் தானம் செய்வது சுக்கிர பகவானுக்கும் வருணனுக்கும் மிகவும் பிடிக்கும். திங்கட்கிழமைகளில் வெள்ளை நிறப் பொருட்கள் தானம் செய்வது நல்லது.
உங்கள் மனக் குணங்களைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள். கோபம் வரும்போது 10 முறை ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள். அவசர முடிவுகளைத் தவிருங்கள். தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் – தியானம், யோகா, பிராணாயாமம் இதற்கு உதவும். பிடிவாதத்தைக் கொஞ்சம் தணித்துக் கொண்டு, மற்றவர்களின் நல்ல ஆலோசனைகளையும் கேட்கத் தயங்காதீர்கள்.
வீட்டில் வெள்ளி அல்லது செம்புத் தட்டில் நீர் நிறைத்து, அதில் மல்லிகைப் பூக்களைப் போட்டு, அந்த நீரைத் தெளிப்பது உங்கள் வீட்டின் சூழலைப் புனிதமாக்கும். குளியலறையில் குளிர்ந்த நீரில் குளிப்பது, முடிந்தவரைச் சூடான உணவுகளைத் தவிர்ப்பது இவை உங்கள் உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் வைக்கும்.
அதிகப் பிரபலமும், பணமும் கிடைக்கும்போது, செருக்கு (arrogance) தானாக வந்துவிடும். அதைத் தவிர்த்து, பணிவாக நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். "நானே பெரியவன்" என்ற கர்வம் உறவுகளை இழக்கச் செய்யும். அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, மற்றவர்களையும் மதிப்பது உங்கள் செல்வாக்கை இன்னும் பெருகச் செய்யும்.
கலைகள் மீதான உங்கள் ஈடுபாட்டை விடாதீர்கள். இசை, நடனம், ஓவியம், சிற்பம், எழுத்து இவை உங்களுக்கு மனநிம்மதியைத் தரும். உங்கள் படைப்பாற்றலை நேர்மறையான திசையில் பயன்படுத்துங்கள். சமூகத்தில் உங்கள் கலைத் திறமையால் மற்றவர்களுக்கு உதவ முயற்சிக்கவும்.
முக்கிய குறிப்பு: உங்கள் முழு ஜாதகத்தையும் ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் ஆகிய கிரகங்களின் நிலையையும், சுக்கிர தோஷம், வருண தோஷம் ஏதேனும் உள்ளதா என்றும் தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் இந்தப் பொதுவான பலன்கள் உங்களுக்குச் சரியாகப் பொருந்துமா என்று அறிய முடியும். உங்கள் பிறப்பு ஜாதகத்தில் கிரகங்களின் நிலை, நட்சத்திரப் பாதம், லக்னம் இவற்றைப் பொறுத்து பலன்கள் மாறும். ஒரு நல்ல ஜோதிடரின் ஆலோசனை உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
பூராடம் உங்களுக்கு அழகு, செல்வம், கலைத்திறன், வெற்றி, நல்ல குடும்பம் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது. இதைப் பாதுகாப்பதும், மேலும் மேன்மைப்படுத்துவதும் உங்கள் கைகளில் உள்ளது. தர்மத்தில் நில்லுங்கள், நேர்மையைக் கைவிடாதீர்கள், தான தருமங்கள் செய்யுங்கள், அகங்காரத்தைத் தவிருங்கள். அப்படியானால், உங்கள் வாழ்க்கை உண்மையிலேயே ஒரு பூக்கும் தாமரையாக அழகாக, மணக்கும்படி, வளமாக அமையும்.

Post a Comment