உத்திரம் நட்சத்திரம் வாழ்க்கை பொதுப்பலன் | Uthiram Natchathiram Palangal in Tamil

வணக்கம் உங்களை அங்கதம் ஆரா வலைத்தளதிற்கு  அன்புடன் வரவேற்கிறேன். இந்தப் பதிவுல உத்திரம் நட்சத்திரத்தில் (Uthiram / Uttara Phalguni) பிறந்த உங்களுக்கான வாழ்க்கை குணாதிசயங்கள், எதிர்கால வாழ்க்கை, அதிர்ஷ்ட யோக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பார்க்க போகிறோம்.

நட்சத்திரத்தின் அமைப்பும் புராணக் கதையும்

பால்வெளிப் பாதையில், கட்டிலின் பின்பக்கக் கால்கள் (hind legs of a cot) போன்ற வடிவத்தில் அமைந்த நட்சத்திரம்தான் இந்த உத்திரம் நட்சத்திரம். முன்புற இரு கால்கள் பூரம், பின்புற இருக் கால்கள் உத்திரம்  இது ஒரு முழுமையான அமைப்பு.


உத்திரம் நட்சத்திரத்தின் அதிதேவதை அரியமான் (Aryaman – one of the Adityas, god of patronage and unions) மற்றும் சூரிய பகவான் (Sun). உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி (கிரக அதிபதி) சூரிய பகவான் (Sun). உத்திரம் நட்சத்திரத்தின் விருட்சம் (புனித மரம்) அலரி மரம் (Alari / Indian Mallow or Arali – Oleander). உத்திரம் நட்சத்திரத்தின் 1ஆம் பாதம் சிம்ம ராசியிலும் (Simha / Leo), 2ஆம், 3ஆம், 4ஆம் பாதங்கள் கன்னி ராசியிலும் (Kanni / Virgo) வரும்.


பங்குனி உத்திரம் (Panguni Uthiram) மிகச் சிறப்பான ஒரு நன்னாளாகும். தெய்வத் திருமணங்கள் பலவும் இந்த உத்திரம் நட்சத்திரத்தில்தான் நடைபெறுகின்றன. சிவபெருமான் – பார்வதி, ஸ்ரீராமர் – சீதை, முருகன் – தெய்வானை ஆகிய தெய்வங்களின் திருமணங்கள் இந்த நன்னாளில்தான் நடைபெற்றதாகப் வரலாற்று புராணங்கள் கூறுகின்றன. இதனால், இந்த நட்சத்திரம் திருமணத்திற்கும் மாங்கல்யத்திற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நல்ல இணை, நல்ல துணை, நல்ல குடும்பம் இவற்றை உத்திரம் குறிக்கிறது.


உத்திரம் நட்சத்திரம் குணாதிசயங்கள் – இயல்பு

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எப்போதும் நேர்மையும், கண்ணியம் தவறாமல் நடக்கக்கூடியவர்களாக இருப்பீர்கள். சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால், உங்கள் பேச்சில் ஒரு அதிகாரமும், கம்பீரமும் இருக்கும். நீங்கள் எதைச் சொன்னாலும், அது சட்டத்தின் குரலில் ஒலிக்கும்.


மற்றவர்கள் உங்களுக்கு மரியாதை (respect) கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். யாராவது உங்களைத் தரக்குறைவாகப் பேசினால், அதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது, என்னை இப்படிப் பேச உங்களுக்கு என்ன தைரியம்னு சண்டைக்கு போவிங்க.


உங்களுக்கு நட்பு வட்டம் அதிகம். நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டீர்கள். அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள்; நீங்கள் போக வேண்டியதில்லை.


எந்த ஒரு காரியத்திலும் ஒரு பொறுப்புணர்வோடு (sense of responsibility) செயல்படுவீர்கள். கடின உழைப்பாளி நீங்கள். உங்கள் உழைப்பால் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவீர்கள், அந்த வளர்ச்சி நிலையானத இருக்கும். சட்டென்று உங்களுக்கு புகழ் வராது; ஆனால் வரும்போது அது நிலையாக வரும்.


உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இயற்கையாகவே நல்ல நிர்வாகத் திறமை (administrative skill) இருக்கும். மற்றவர்களை வைத்து வேலை வாங்குவதில் கெட்டிக்காரர்கள். நீங்கள் எங்கு இருந்தாலும், உங்களைச் சுற்றி ஒரு ஒழுங்கு இருக்கும், உங்களுக்கு கீழ் இருபவர்களையும் அந்த ஒழுங்கு பின்பற்ற வைப்பிர்கள். கடையிலாகட்டும், அலுவலகமாகட்டும், வீடாகட்டும்  நீங்கள் மேற்பார்வை செய்தால் எல்லாம் ஒரு இரயில் பாதையில் ஓடும்.


நீங்கள் யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டீர்கள். உங்கள் கொள்கைகளில் எப்போதும் உறுதியாக இருப்பீர்கள். இதனால் சில நேரங்களில் மற்றவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். "இது தவறு, இதை நான் செய்ய மாட்டேன்" என்று சொல்லிவிட்டால், உங்களுக்கு கோடி ரூபாய் கொடுப்பதாகச் சொன்னாலும் மாறமாட்டீர்கள்.


குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பீர்கள். குறிப்பாக உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டிருப்பீர்கள். திருமண வாழ்க்கையில் ஒரு சீரியஸ் மனிதர்; உங்கள் துணைக்கு மரியாதை கொடுப்பீர்கள். பிள்ளைகளை ஒழுங்காக வளர்ப்பீர்கள்.


வாழ்க்கை மற்றும் திசா பலன்கள் (Dasha Periods)

இப்போது உங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வரும் திசாக்களைப் பார்க்கலாம். உங்கள் ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி ஆகிய கிரகங்களின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறும். திசை வயது தோராயமாக தரப்பட்டுள்ளது, நட்சத்திர பாகத்தை பொருத்து மாறுபடும்.


சூரிய திசை  (குழந்தைப் பருவம்): நீங்கள் பிறக்கும் போதே சூரிய திசையில் பிறந்திருப்பீர்கள். இது உங்கள் குழந்தைப் பருவத்தில் (தோராயமாக 0 முதல் 6 வயது வரை – சூரிய திசை காலம் 6 வருடங்கள்) நடக்கும். சூரிய பகவான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், உங்கள் குழந்தை பருவம் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், பெற்றோரின் அரவணைப்போடும் இருக்கும் குடும்பத்தில் உங்களை எல்லோரும் "ராஜா" என்று செல்லமாக அழைப்பார்கள்.


சந்திர திசை (பள்ளிப் பருவம்): அடுத்து சந்திர திசை வரும். இது 10 வருட காலம் (தோராயமாக 6 முதல் 16 வயது வரை) நடக்கும். நீங்கள் பள்ளியில் படிக்கும் காலம். சந்திரன் (Moon) நல்ல நிலையில் இருந்தால், கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். தாயின் அன்பும் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கும். உங்களுக்கு நினைவாற்றல் நன்றாக வேலை செய்யும். மொழிப் பாடங்கள் மற்றும் அறிவியல் பாடங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.


செவ்வாய் திசை (உயர்கல்வி மற்றும் வேலைதேடல்): அடுத்து உங்களுக்கு செவ்வாய் திசை வரும். இது 7 வருட காலம் (தோராயமாக 16 முதல் 23 வயது வரை) நடைபெறும். செவ்வாய் உங்க ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும். உங்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விளையாட்டுகளிலும், தைரியமான காரியங்களிலும் ஆர்வம் காட்டுவீர்கள். ஸ்கூட்டர் ஓட்டுவது, மலையேறுவது, பயணம் செய்வது உங்களுக்குப் பிடிக்கும்.


இராகு திசை (வாழ்வின் முக்கியக் கட்டம்): அடுத்து ராகு திசை வரும். இது 18 வருட காலம் (தோராயமாக 23 முதல் 41 வயது வரை) நடக்கும். இது உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமாகும். இந்தக் காலத்தில்தான்  திருமணம், குழந்தை பாக்கியம், மற்றும் தொழில் அல்லது உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஆகியவை நடைபெறும். இராகு பகவான் (Rahu) நல்ல அமைப்பில் இருந்தால், வெளிநாடு செல்லும் யோகம் (foreign travel) மற்றும் பெரிய பொருளாதார வளர்ச்சி உங்களைத் தேடி வரும். நீங்கள் எதிர்பாராத விதமாக ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவி பெறலாம், அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கலாம்.


குரு திசை [முழுமையான உச்சம் (41–57)]: குரு திசை 16 வருட காலம் (தோராயமாக 41 முதல் 57 வயது வரை) நடைபெறும். இந்தக் காலகட்டத்தில் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தும், கௌரவமும் உங்களுக்குக் கிடைக்கும். வீடு, வாகனம், சொத்துக்கள் சேரும். செய்யும் தொழிலில் அல்லது பதவியில் மிகப்பெரிய உச்சத்தை தொடுவீர்கள். உங்கள் நேர்மையும், நிர்வாகத் திறமையும், உழைப்பும் இந்தக் காலத்தில் பலம் பெரும். மக்கள் உங்களை தேடி வருவார்கள்; நீங்கள் ஒரு சிறந்த தலைவராகத் திகழ்வீர்கள்.


சனி திசை (ஓய்வு மற்றும் ஆன்மீகத் தளம்): உங்களுடைய ஓய்வுக் காலத்தில் (57 வயதிற்குப் பிறகு) சனி திசை 19 வருட காலம் நடைபெறும். சனி பகவான் (Saturn) உங்கள் ஜாதகத்தில் பலமாக இருந்தால், முதுமைக் காலத்தில் எந்த ஒரு குறையும் இல்லாமல், நிம்மதியாகவும், ஆன்மீக ஈடுபாட்டுடனும், பேரன் பேத்திகளுடனும் சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிப்பீர்கள். நீங்கள் கோவில்களுக்குச் செல்வதையும், தியானம் செய்வதையும், உங்கள் வாழ்நாளில் சேர்த்த அறிவை இளைய தலைமுறைக்குக் கொடுப்பதையும் விரும்புவீர்கள்.


பரிகாரங்கள் 

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தப் பரிகாரங்களைக் கடைப்பிடிப்பது நல்லது.


சூரிய பகவானை (Sun) வணங்குங்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். சூரியனுக்குச் செம்புத் தட்டில் தண்ணீர் ஊற்றி, "ஓம் ஸூர்யாய நமஹ" என்று 12 முறை கூறி, அலரி மரத்தை (Oleander) வணங்குவது நல்லது; ஆனால் அது நச்சுத்தன்மை கொண்டது என்பதால், அந்த மரத்தைத் தொடாமல் தூரத்தில் இருந்தே வணங்குங்கள்.


பங்குனி உத்திரம் நாளில் கோவிலுக்குச் சென்று, தெய்வத் திருமணங்களை நினைத்து, உங்கள் குடும்பத்தின் மங்கலத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள். அன்னதானம் செய்வது மிகவும் நல்லது.


நேர்மை தான் உங்கள் குணம். அதை விடாதீர்கள். ஆனால், உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருப்பதால், சில இடங்களில் சளைத்துப் போக வேண்டிய கட்டாயம் வரும். "எப்போதும் நான் மட்டும்தான் சரி" என்று இருந்தால், நன்றாகச் செயல்படும் உறவுகளும், தொழிலும் தேயும். சூரிய கிரகத்தின் பலத்தைச் சரியாகப் பயன்படுத்த, தலைமைத்துவத்துடன் பணிவும் தேவை.


அரியமான் (தேவதை) என்பவர் திருமணங்களை இணைப்பவர். ஆகவே, உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் துணையை மதிக்கக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். மனைவி/கணவனுடன் சமமாக நடந்துகொள்ள முயற்சிக்கவும்.


முக்கிய குறிப்பு: உங்கள் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து, சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி ஆகிய கிரகங்களின் நிலையையும், சூரிய தோஷம் ஏதேனும் உள்ளதா என்றும் தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் இந்தப் பொதுவான பலன்கள் உங்களுக்குச் சரியாகப் பொருந்துமா என்று அறிய முடியும்.

Post a Comment

Previous Post Next Post