புனர்பூசம் நட்சத்திரம் வாழ்க்கை பொதுப்பலன் | Punarpoosam Natchathiram Palangal in Tamil

வணக்கம் உங்களை அங்கதம் ஆரா வலைத்தளதிற்கு  அன்புடன் வரவேற்கிறேன். இந்தப் பதிவுல புனர்பூசம் நட்சத்திரத்தில் (Punarpoosam / Punarvasu) பிறந்த உங்களுக்கான குணாதிசயங்கள், எதிர்கால வாழ்க்கை, அதிர்ஷ்ட யோக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பார்க்கலாமா?





நட்சத்திரத்தின் அமைப்பும் புராணக் கதையும்


பால்வெளி அண்டப் பாதையில், வில் போன்ற வடிவத்தில் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட அமைப்புதான் இந்தப் புனர்பூசம் நட்சத்திரம். மிகவும் அழகான, வளைவான வடிவம் இது.


இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை அதிதி (Aditi) தேவர்களின் தாய், தாராள மனம் கொண்டவள். அதிபதி (கிரக அதிபதி) குரு பகவான் (Guru / Jupiter). இதன் விருட்சம் (புனித மரம்) மூங்கில் மரம் (Bamboo). புனர்பூசத்தின் முதல் முணு பாதம் 1ஆம் பாதம், 2ஆம் பாதம், 3ஆம் பாதம் மிதுன ராசியிலும் (Gemini), 4ஆம் பாதம் கடக ராசியிலும் (Cancer) வரும்.


"புனர்" என்றால் மீண்டும், "பூசம்" என்றால் பிரகாசிப்பது என்று பொருள். அதாவது, இழந்ததை மீண்டும் பெறும் ஆற்றல் கொண்ட நட்சத்திரம் இது. வாழ்க்கையில் எத்தனை முறை தோல்வி ஏற்பட்டாலும், மீண்டும் எழுந்து பிரகாசிக்கும் சக்தியை இது தரும்.


ஸ்ரீ இராமபிரான் அவதரித்த பெருமைக்குரிய நட்சத்திரம் புனர்பூசம் ஆகும். அதனாலேயே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தர்மசிந்தனையும், நேர்மையும் இயல்பாகவே இருக்கும். ராமர் எப்படி எல்லாத் துன்பங்களையும் பொறுமையோடு எதிர்கொண்டாரோ, அதே போன்ற குணம் உங்களுக்கும் உண்டு.


புனர்பூசம் நட்சத்திரம் குணாதிசயங்கள் - இயல்பு

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எப்போதும் சாந்தமான தோற்றமும், முகத்தில் முகப்பரு கொண்டிருப்பீர்கள். உங்களைப் பார்க்கும் போதே மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும்.


குரு பகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால், உங்களுக்கு இயற்கையாகவே தெய்வ பக்தி, ஒழுக்கம், நேர்மை இவை எல்லாமே அதிகமாக இருக்கும். நீங்கள் எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும், "இது சரியானதா?", "இது தர்மமானதா?" என்று முதலில் யோசித்து பின் செய்விர்கள்.


மற்றவர்களுக்கு வழிகாட்டும் திறன் உங்களிடம் இருக்கும். அதனால் உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ குழப்பத்தில் இருக்கும்போது நிங்களே முன் வந்து, அவர்களிடம் ஓடிப்போய், "இப்படிச் செய்யுங்கள், அப்படிச் செய்யுங்கள்" என்று ஆலோசனை சொல்லும் நிலையில் இருப்பீர்கள். பலருக்கு நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக (Guide) இருப்பீர்கள். சிறந்த அறிவாற்றலும், கற்பனை வளமும் கொண்டிருப்பீர்கள்.


உங்களுக்கு ஞாபக சக்தி மிக அதிகம். படித்தது, கேட்டது, பார்த்தது எதையும் எளிதில் மறக்க மாட்டீர்கள். ஆனால், நீங்கள் எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துத  தான் ஒரு முடிவுக்கு வருவீர்கள். அவசரப்பட்டு எந்தக் முடிவும் எடுக்க மாட்டீர்கள். "அவசரம் அசிங்கம்" என்பது உங்கள் பொன்மொழி.


மற்றவர்கள் கஷ்டப்படுவதை உங்களால் பார்க்கவே முடியாது. யாராவது துன்பத்தில் இருந்தால், உங்களுக்கு மனது பொறுக்காது, உங்களை அறியாமல் உங்களின் கண்ணில் கண்ணீர் வந்து விடும். உங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்குச் செய்வீர்கள். பணம், பொருள், ஆலோசனை, நேரம் எதுவாக இருந்தாலும் உங்கள் சக்திக்கு என்ன முடியுமோ அதை கொடுக்கத் தயாராக இருப்பீர்கள்.


எந்தச் சூழ்நிலையிலும் அரிச்சந்திரன் போல உண்மையை மட்டுமே பேச விரும்புவீர்கள். பொய் சொல்லிவிட்டு, அப்புறம் "ஐயோ, நான் என்ன இப்போ சொன்னேன்?" என்று வருந்தும் குணம் உங்களுக்குக் கிடையாது. சூது வாது தெரியாத வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் நீங்கள். அதனால்தான், சில சமயங்களில் உங்கள் நேர்மையைச் சிலர் தவறாகப் புரிந்துகொள்ளலாம் சிலர் உங்களை பயன் படுத்தி கொள்வார்கள். ஆனாலும், நீங்கள் உங்கள் வழியிலிருந்து தடுமாற மாட்டீர்கள்.


எந்த ஒரு விஷயத்தையும் காரண காரியம் (Logic) விவாதிக்கும் திறன் பெற்றிருப்பீர்கள். யாராவது உங்களிடம் ஒரு யோசனை சொன்னால், அதன் நல்லது கெட்டது, காரண காரியம், முடிவுகள்  எல்லாவற்றையும் ஆராய்ந்து பேசுவீர்கள். எளிமையான வாழ்க்கையைத்தான் அதிகம் விரும்புவீர்கள். ஆடம்பரத்தை விட, மனநிறைவே உங்களுக்கு முக்கியம்.


வாழ்க்கை மற்றும் திசா பலன்கள் (Dasha Periods)

இப்போது உங்கள் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நடக்கும் திசாக்களைப் பார்க்கலாம். உங்கள் ஜாதகத்தில் குரு, சனி, புதன் ஆகிய கிரகங்களின் நிலையைப் பொறுத்து இந்த பலன்கள் மாறும்.


குரு திசை (குழந்தைப் பருவம்): நீங்கள் பிறக்கும் போதே குரு திசையில் பிறந்திருப்பீர்கள். இது உங்கள் குழந்தைப் பருவத்தில் (தோராயமாக பிறப்பு முதல் 16 வயது வரை) நடக்கும். குரு பகவான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், உங்கள் குழந்தைப் பருவம் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெற்றோரின் அரவணைப்புடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். சின்ன வயதிலேயே உங்களுக்கு நேர்மையும், பக்தியும் இயல்பாக வந்துவிடும். ஊரில் எல்லோரும் "இந்தப் பிள்ளை எவ்வளவு நல்லவன்/நல்லவள்" என்று சொல்லும் அளவுக்கு நற்பெயர் ஊரில் இருக்கும்.


சனி திசை (பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம்): சனி திசை 19 வருட காலம் (தோராயமாக 16 முதல் 35 வயது வரை) நடக்கும். நீங்கள் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் காலம், பின்னர் இளமைப் பருவம். சனி பகவான் (Saturn) உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருந்தால், கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். கடின உழைப்பும், பொறுப்புணர்வும் இளம் வயதிலேயே வந்துவிடும். டீன் ஏஜிலேயே நீங்கள் பணம் சம்பாதிக்கத் தொடங்கலாம், அல்லது குடும்பப் பொறுப்புகளை எடுத்துக்கொள்வீர்கள். சிலருக்கு சனி திசை காலத்தில் பெற்றோரின் தொழிலில் உதவியாக இருப்பார்கள்.


புதன் திசை (வாழ்வின் முக்கியக் கட்டம்): புதன் திசை 17 வருட காலம் (தோராயமாக 35 முதல் 52 வயது வரை) நடைபெறும். இது உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான கால கட்டமாகும். சனியால் பட்ட பாடு முடிந்து இந்தக் காலத்தில்தான் நல்ல வேலை, தொழில், திருமணம், சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஆகியவை நடைபெறும். புதன் (Mercury) பலமாக இருந்தால், சமுதாயத்தில் நல்ல மதிப்பும், பொருளாதார உயர்வும் கிடைக்கும். உங்கள் அறிவு திறமையால் தொழிலில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். நீங்கள் ஒரு நல்ல அலுவலராக இருந்தால், பதவி உயர்வும் புகழும் வரும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, இந்தக் காலத்தில் புதிய திட்டங்கள் வெற்றிபெறும். திருமணமும், குழந்தை பாக்கியமும் இந்தக் காலத்தில்தான் நடக்கும்.


கேது திசை (ஆன்மீகப் பாதை):  கேது திசை 7 வருட காலம் (தோராயமாக 52 முதல் 59 வயது வரை) நடக்கும். இந்தக் காலகட்டத்தில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும் கோயிலே கதி என இருப்பிர்கள். உங்களுக்குத் திடீரென்று கடவுள், யோகா, தியானம், கோவில், தல யாத்திரைகள் என்று ஒரு ஈர்ப்பு வரும். கேது பகவான் (Ketu) நல்ல நிலையில் இருந்தால், வாழ்க்கை மிகச் சீராகவும், எவ்வித தடையுமின்றி சந்தோஷமாகவும் செல்லும். உங்களுக்கு ஆன்மீக குருவின் சந்திப்பும், சில அதிசய அனுபவங்களும் ஏற்படலாம்.


சுக்கிர திசை (ஓய்வுக் காலம் (முதுமை)): உங்களுடைய ஓய்வுக் காலத்தில் (59 வயதிற்குப் பிறகு) சுக்கிரன் திசை நடைபெறும். இது 20 வருட காலம் நடக்கும். சுக்கிர பகவான் (Venus / Shukra) உங்கள் ஜாதகத்தில் நல்ல அமைப்பில் இருந்தால், முதுமைக் காலத்தில் எந்த ஒரு குறையும் இல்லாமல், மிகுந்த வசதி வாய்ப்புகளுடனும், பேரன் பேத்திகளுடனும் சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிப்பீர்கள். உழைத்து நன்றாகச் சேர்த்து வைத்த பணமும், சொத்தும் இருக்கும். உங்களுக்கு நல்ல ஆடை, நல்ல உணவு, இனிமையான இசை, கலைகள் மீது ஈடுபாடு அதிகமாக இருக்கும். பேரன் பேத்திகளை வளர்ப்பதிலும், அவர்களுக்கு ஆலோசனை சொல்வதிலும் மகிழ்ச்சி அடைவீர்கள். 


பரிகாரங்கள் 

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்குச் சில பரிகாரங்களைக் கடைப்பிடிப்பது உங்களுக்கு நல்லது.


குரு பகவானை (வியாழன்) வழிபடுவது மிக முக்கியம். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து, மஞ்சள் கட்டி, வெல்லம், கடலைப் பொரி போன்றவற்றைத் தானம் செய்யவும். பிரகார வழிபாடு அதாவது கோவிலைச் சுற்றி வருவது குரு பகவானுக்கு மிகவும் பிடித்தமானது.


மூங்கில் மரத்தை (இந்த நட்சத்திரத்தின் விருட்சம்) வணங்குங்கள். குரு பகவான் மூங்கிலில் வசிப்பதாகச் புராண கதை உண்டு. உங்கள் வீட்டில் ஒரு சிறிய மூங்கில் செடி வைத்துக்கொள்ளுங்கள்.


தர்மத்தைப் பின்பற்றுங்கள் இராமர் காட்டிய வழியில் செல்லுங்கள். உண்மையைச் சொல்லுங்கள், ஏழைகளுக்கு உதவுங்கள், பொய் சொல்லாதீர்கள், பிறர் பொருளை அபகரிக்காதீர்கள். இது தான் உங்களுக்குப் பெரிய பரிகாரம்.


உங்களிடம் உள்ள ஞாபக சக்தியை (memory power) நல்ல வழியில் பயன்படுத்துங்கள் தியானம், துதிப்பாடல்களை மனப்பாடம் செய்தல், நல்ல புத்தகங்களைப் படித்தல் போன்ற வற்றில் செலவிடுங்கள்.


"இழந்ததை மீண்டும் பெறும்" என்ற உங்கள் நட்சத்திர குணத்தை நம்புங்கள். வாழ்க்கையில் ஏமாற்றம் வந்தால், "நான் மீண்டும் எழுந்துவிடுவேன்" என்ற உறுதியை விடாதீர்கள். அதுதான் புனர்பூசத்தின் உண்மையான வரம்.


முக்கியமாக குறிப்பு: உங்கள் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து, குரு, சனி, புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் நிலையைத் தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் இந்தப் பொதுவான பலன்கள் உங்களுக்குச் சரியாகப் பொருந்துமா என்று புரியும்.


Post a Comment

Previous Post Next Post